தீர்வு கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை என பெருந்திரளான தமிழ் மக்கள் இக்கவனயீர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டு வருகின்றனர்.
டென்மார்க்கில்...
டென்மார்க்கில் நேற்று நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டு தாயத்தில் உள்ள உறவுகளின் அவல நிலையினை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
இதில் கலந்துகொண்ட மக்களின் ஆவேசமான முழக்கங்களை அடுத்து வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் மாட்டின் கெல்மான் நேரடியாக வந்து தமிழ் மக்களிடம் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
இந்த உறுதிமொழியில் நம்பிக்கை அற்றிருந்த தமிழ் மக்கள் டென்மார்க் தீர்க்கமானதொரு முடிவெடுக்கும் வரையில் வெளிவிவகாரத்துறை அமைச்சின் முன்பாக தொடர்ந்தும் இரவு-பகலாக தங்கியிருந்து போராட்டம் நடத்துவது என தீர்மானித்தனர்.
இதனை ஏற்றுக்கொள்ளாத காவல்துறையினர் 83 பேரை கைது செய்து சில மணி நேரத்தில் அவர்களை விடுவித்தனர்.
இதனால் மக்கள் தேவாலயம் ஒன்றில் இரவுப்பொழுதினை கழித்து விட்டு மறுபடியும் காலை 10:00 மணியளவில் போராட்டத்தினை தொடரவுள்ளனர்.
பிரான்சில்...
வன்னியில் திட்டமிட்ட தமிழினப் படுகொலையை நிறுத்தக் கோரி பிரான்ஸ் வாழ் தமிழ்மக்களால் நேற்று முன்நாள் திங்கட்கிழமை பாரிஸ் நகரில் உள்ள அன்வலிட் என்ற வெளிவிவகாரத்துறை அமைச்சின் முன்றலில் தொடங்கப்பட்ட போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் அங்கு ஒன்று திரண்டு தமது உரிமை முழக்கங்களைத் தொடர்ந்து வானதிர முழக்கமிட்டு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தாய் நில உறவுகள் இந்திய, சிறிலங்கா இராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்த வேளையில், தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர தீர்வைத் தேடித் தரும் வரை இந்த கவனயீர்ப்பு போராட்டம் தொடரும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளையில், நேற்று செவ்வாய்க்கிழமை காலை வேலையில் குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து கவனயீர்ப்பு நிகழ்வை நடத்த வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்த போதும் மக்கள் அந்த இடங்களில் இருந்து கலைந்து செல்ல மறுத்ததால், பிரெஞ்சு காவல்துறையினரால் வன்முறை சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தொடரும் தடைகளை மீறி, தாய் நிலத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பாரிய மனித அவலத்தை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழனின் கையிலும் இருக்கிறது என்பதை முன்னிறுத்தி பெருந்திரளான தமிழ் மக்கள் உரிமையுடன் இப்பேரணியில் கலந்து கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து ஏனைய பிரான்ஸ் வாழ் தமிழ் உறவுகளும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என உரிமையுடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுவீடனில்...
தொடரும் இனப்படுகொலையில் நாளாந்தம் சிக்கித் தவிக்கும் தாயக உறவுகளை சிறிலங்கா அரசிடம் இருந்து மீட்டு எடுக்க சுவீடன் வெளிவிவகாரத்துறை அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.
மேலும், சுவீடன் நாட்டின் சோசலிச சிவப்புக் கட்சியினரும் இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தின் வாயிலாக வெளிவிவகாரத்துறை அமைச்சின் பிரதிநிதிக்கு மனு வழங்கப்பட்டதாகவும் மனுவைப் பெற்றுக்கொண்ட பிரதிநிதி அம்மனுவை தென்னாசியாவுக்கு பொறுப்பான அதிகாரியிடம் சேர்ப்பிப்பதாக உறுதியளித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக மீண்டும் இப்போராட்டம் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறவிருப்பதால் பேரழிவில் இருந்து தமிழ் மக்களைக் காக்க தொடர்ச்சியாக அணித்திரளுமாறு சுவீடன் வாழ் தமிழ் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
யேர்மனியில்...
தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்துமாறு கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் யேர்மனியின் டுசில்டோவ் நகரில் உள்ள மாநில நாடாளுமன்றத்துக்கு அருகில் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேம்பாலத்துக்கு கீழ்ப்பகுதியில் கூடியிருந்த தமிழ்மக்கள் அங்கிருந்து நகர்ந்து மாநில நாடாளுமன்றம் முன்பாக ஒன்றுகூடி சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டம் இன்றும் தொடரும் எனவும் அனைத்து தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இத்தாலியில்...
சிறிலங்கா அரசின் கொடிய இனவாத அழிப்பை கண்டித்தும் வன்னியில் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் எறிகணை மற்றும் வான் தாக்குதல்களையும் நிறுத்தக் கோரியும் உடனடியாக போரை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்த சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டியும் நேற்று இத்தாலி பலெர்மோ நகரில் அமைந்துள்ள சிசீலி மாநில முதல்வர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
மேலும், காவல்துறையினர் மக்களை கலந்து செல்லுமாறு பலமுறை வலியுறுத்தியும் மக்கள் இறுதிவரை அந்த இடத்தில் நின்று தமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இப்போராட்டம் தொடர்ச்சியாக நாளை பிற்பகல் 1:30 நிமிடம் தொடக்கம் சிசீலி மாநில அலுவலகம் முன்பாகவும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை இத்தாலியின் பிரதான தொலைக்காட்சி நிறுவனமான ராய் (Rai) முன்பாகவும் நடைபெறவிருப்பதால் இனப் படுகொலையில் இருந்து தமிழ் மக்களைக் காக்க தொடர்ச்சியாக அணித்திரளுமாறு இத்தாலி வாழ் தமிழ் மக்களிடம் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Source(Puthinam.com)
0 comments:
Post a Comment